காகித ஓடம் கடலலை மீது போவது போலே
மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல பழகி விட்டனர். வீட்டை விட்டு கிளம்பும் போது எங்கு செல்ல எத்தனிக்கிறோம் என்று நமக்கு தெரிவதால் பயணம் எளிதாகிறது. சில சமயம் போகும் வழி தெரியாவிட்டாலும் சேருமிடம் அறிந்திருந்தால் யாரிடமாவது கேட்டாவது சென்று அடைகிறோம். அப்படி பழகி விட்டோம். சேருமிடம் தெரியாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டால் அது எப்படி இருக்கும்? அதுவும் சரியான வெளிச்சம் இல்லா ஓர் அடர்ந்த பாதையில்? கண் போன போக்கிலே கால் போகலாமா என்பர், ஆனால் கண் எந்த பக்கமும் பார்க்க இயலாத போது கால் நேரே போக வேண்டும் என்றால் எப்படி?
என்னடா சொல்ல நினைக்கிரே, எதுக்கு டா இவ்வளவு முஸ்தீபு என்று எண்ணுகிறீர்களா? நிற்க. இதற்கு முன் நான் பெற்ற அனுபவங்களை இந்த இரண்டு linkகளில் படித்து விட்டு தொடரவும்.
முருங்கை மரத்தை ஏறி வேதாளத்தை பிடிக்க சென்ற விக்ரமாதித்தன் போல மீண்டும் ஒரு கடல் நீச்சல் முயற்ச்சியை பற்றியது தான் இந்த வலைப்பூ. கமலஹாசன் அன்பே சிவம் படப்பாடலில் கூறியது போல "ஏதாச்சும் போதை ஒண்ணு எப்போதும் தேவை கண்ணா, இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல.." இந்த முறை ஏற்றுக்கொண்ட போதை உடுப்பிக்கு அருகில் உள்ள மால்பே என்ற ஊரில் டிசம்பர் மாதம் நடக்கும் நெடுமுப்போட்டி (Malpe Triathlon). அந்த போட்டியில் நீச்சல் கடலில் செய்ய வேண்டும், அதற்கு பயிற்சிக்காக தான் இம்முறை முருங்கை மரம் ஏற்றம்.
Bay of Life என்ற நிறுவனம் நடத்துகின்ற இரண்டு நாள் பயிற்சி முகாம் பற்றி தகவல் அறிந்ததும் நானும் என் நண்பர்களும் பதிவு செய்தோம். அவர்களும் மால்பே முருங்கை case தான். ஒரு இனம் புரியாத பீதி மனதில் இருந்தாலும் இம்முறை சாதித்து விடுவோம் என்று மனம் சொல்லிக்கொண்டிருந்தது. பதிவு செய்யும் முன் கொடுக்கப்பட்ட அலை பேசி எண்ணுக்கு அழைத்த பொது மிகவும் பரிச்சயமான சிங்கப்பெண் ஆரத்தி ஸ்வாமிநாதன் பேசினார். நல்ல சகுனமாக பட்டது. அதற்கேற்றார் போல குழுவில் ஒரு இளம் பெண், குழுவினர் அனைவர்க்கும் செல்ல தங்கச்சி ஐஸ்வர்யா, கொஞ்சம் ஊக்கம் கொடுத்தாள். நமக்கு தெரிந்த philosophy தான் என்றாலும் இன்னொருவர் சொல்லக்கேட்கும் போது ஒரு மனஅமைதி.
Anyway சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு Bay of Life சென்றடைந்தோம். 7 :30 க்கு கடற்கரை அழைத்து சென்றனர். அங்கு அம்ருதா என்ற ஒருவர் வந்து சில theory விஷயங்களை சொன்னார். கடலலை எப்படி உருவாகிறது, அலையின் உயரத்தை கொண்டு ஆழத்தை கணிப்பது எப்படி, rip current (உப்பங்கழி நீர் ஓட்டம்) என்றால் என்ன போன்ற விஷயங்களை தெளிவாக சொன்னார். பின் எமக்கு அளிக்கப்பட உயிர் காப்பான் கவி எங்களை கரையோரத்திற்கு கொண்டு சென்றார். அலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் (சிலவற்றின் மேல், சிலவற்றின் கீழ்) என்று சொல்லித்தந்தார். பின்னர் நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்து சென்றார் (ஐயா, கையை பிடித்து அழைத்துசெல்ல இது என்ன மைதானமா? கூட வந்தார், அவ்வளவு தான்).
எங்களுக்கு துணையாக 50 மீட்டர் தூரத்தில் ஒரு அலைமிதவைப்பலகை (surfboard) மீது ஒருவரும் அங்கிருந்து இன்னொரு 40 மீட்டர் தொலைவில் மற்றோரு பலகையில் இன்னொருவரும் இருந்தனர், மேற்பார்வை இட்டுக்கொண்டு. அலைகள் ஓயாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருக்க கவி எங்களை ஒரு பெரிய அலை கடந்து சென்றதும் நீச்சல் அடித்து உள்ளே செல்லச்சொன்னார். என் வாய்ப்பு வந்த போது நான் இரு அலைகளை அவ்வாறே கடந்து போனேன். மூன்றாவதாக ஒரு பெரிய அலை. மூச்சு முட்டுவது போல் தோன்றவே அலாக்காக ஒரு U -turn போட்டு கரை சேர்ந்தேன். பின்னர் ராமசந்திரன், சுபஸ்ரீ, ஐஸ்வர்யா அனைவரும் அழகாக நீந்தி செல்வதை பார்த்தேன். மூன்றாம் அலை என்னை பின்தள்ளி இருந்தாலும் இரண்டு அலைகளை கடந்து விட்டோமே என்று ஒரு நம்பிக்கை. மீண்டும் வாய்ப்பு வந்த போது, சற்றே தைரியத்துடன் (கவின் என் பக்கத்தில் நீந்தி கொண்டு வந்தார்) உள்ளே சென்றேன். சதீஷ் என்னுடன் இருந்தார். தூரத்தில் தெரிந்த பலகை பார்க்க ஒவ்வொரு முறையும் தலையை நேரே பாம்பு போல் தூக்கி தூக்கி (மூச்சு எடுக்க) ஒரு வழியாக சென்று அடைந்தேன். கரண்ட் என்னை ஒரு பக்கமாக தள்ள, சற்றே adjust செய்து சென்றது ஏனோ இன்னும் ஒரு மனோதைரியத்தை தந்தது. கவி என்னை பார்த்து சார், நீங்கள் இன்னும் கொஞ்சம் rotate செய்யலாம் என்றார். புரிந்தது, பாம்பு போல முன்னே பார்க்க நேர்ந்ததால் என்னுடைய நீச்சல் form மாறி இருந்தது. சரி என்று சொல்லி, முதல் பலகையில் இருந்து அடுத்தது நோக்கி சென்றேன். கார்த்திக் க்கு ஒரு நன்றி கூறி, மகேந்திரனை நோக்கி. இம்முறை நீச்சல் சுலபமாக இருந்தது, ஏனெனில் அலைகள் சீற்றம் இல்லை. அங்கு சென்று அடைந்த பிறகு சில நிமிடங்கள் அங்கேயே கடலில் மிதந்து, பிறகு பலகையை பிடித்து, பிறகு விட்டு சிறிது நேரம் கழித்தேன். பின் கார்த்திக்கை நோக்கி வந்தேன்.
இம்முறை ஏதோ காரணங்களினால் என் பார்வையில் அந்த பலகை படவில்லை. சற்றே பயந்து விட்டேன். உடம்பெல்லாம் விறைத்து போன மாதிரி ஒரு எண்ணம். அப்படியே மல்லாக்க படுத்து விட்டேன். வானத்தை பார்த்தேன். இளையராஜா சொன்னது போல "ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ". பின் மீண்டும் திரும்பி தலையை தூக்கி "கார்த்திக்" என்று சத்தமாக குரல் கொடுத்தேன். அபயக்குரல் கேட்டு கார்த்திக் பலகையை வேகமாக என் பக்கம் இயக்க ஆரம்பித்தது என் ஓரப்பார்வையில் பட்டது. அப்பாடா! மீண்டும் குரல் கொடுத்தேன், கார்த்திக், வர வேண்டாம், பாத்துட்டேன். நமக்கு பகல்லயே பசுமாடு தெரியாது, அதுக்கு தான் எங்க இருக்கீங்க ன்னு குரல் கொடுத்தேன் என்று சொல்லி (சத்தியம், இவ்வளவு பேசினேன், கடலில் நீந்திக்கொண்டே) அவரை சென்று அடைந்தேன். பின்னர் கரை நோக்கி போக எத்தனித்தேன். ஆனால் நமக்கு தான் தொலைநோக்கு பார்வை இல்லையே. சின்னத்தம்பி கவுண்டமணி போல மங்கலாக ஏதோ மானிடர்கள் போல் தெரிய அந்த பக்கம் நீந்த ஆரம்பித்தேன். வந்தது பார் ஒரு பெரிய அலை, அலாக்காக என்னை சுழட்டி போட்டது. மூக்கில் கடல் நீர் சென்றது. ஆனால் இன்றைய பயிற்சியின் முக்கியமான கட்டம் அது தான். அலை சுழட்டிவிட்ட பிறகு கால்கள் தரையை தேடவில்லை ! (That Eureka! moment). சுதாரித்து கொண்டேன், மீண்டும் நீந்த ஆரம்பித்தேன். அலைகள் மீண்டும் என்னை சுழற்றிய போதும் அசராமல் வந்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சி.
நாளை முகாமின் இரண்டாம் நாள். அனுபவங்கள் தொடரும்.
ஓகே, கதை முடிந்தது. தலைப்பு என்ன, முதல் பத்தியில் என்ன சொன்னேன், கருத்து என்ன, போன்ற பல untied ends. நீச்சல் குளத்தில் நீந்தும் போதோ, குட்டையில் நீந்தும் போதோ, நாம் இதுவரை செல்ல எத்தனிக்கிறோம் என்று நமக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால் கடலில் அது போல ஒரு landmark distance இல்லை. அதனால் அந்த நிலையற்ற தன்மை (uncertainty) ஐ மனம் ஏற்க மறுக்கிறது. அதனால் கால்கள் தரையை தேடுகின்றன. மனதை அடக்கினால், நாமும் காகித ஓடம் தான், மூழ்க மாட்டோம் மிதப்போம். இதே சித்தாந்தம் பிறவிப்பெருங்கடல் நீந்தவும் உபயோகம் ஆகும், புலன்களை அடக்கினால் (மனதை அடக்கு என்பது புலன்களை அடக்கு என்று வியாபிக்கறது). சரி மிதந்தால் நாம் சேருமிடம் சேர்வோமா? கண்டிப்பாக, எங்கே சேர வேண்டுமோ அதற்கான முயற்சியை எடுத்தால் சேர்வோம். காகித ஓட்டத்திற்கும் நமக்கும் உள்ள ஒரே ஒற்றுமை நாம் மிகவும் அலட்டி கொள்ளாமல் இருந்தால் மிதப்போம்; வேற்றுமை நம்மால் கை கால்களை நல்ல விதமாக இயக்க முடியும்; அதை செய். சேரும் இடம் தானாக வந்து விடும்.
Practical points, laced with deep philosophy...!!! Nice read, Jagan... Your intro reminded me of Tamarai's song in Maara... "Serum varai pogum idam theriyadenil... Bodhai tharam perinbam veruzhadha...?!!"
ReplyDeleteபயம் மரணம்... தைரியம் வாழ்வு... சுவாமி விவேகானந்தர் கூறிய இந்த தத்துவம் உங்கள் வாழ்வின் அனுபவத்தின் மூலம் நன்றாக உணர முடிந்தது ஜகன் சார். நன்றிகள் பல.
ReplyDelete