Hyderabad FM (Food Marathon)
ஒரு தென்னிந்திய நெடுந்தூர சோற்று பயணம்
Hyderabad marathon போட்டி(!?)க்கு TTB ல் இருந்து ஒரு சிறு கூட்டம் பதிவு செய்திருந்தோம். அதிகமாக சாப்பிட்டு கரைக்க ஓடுவோர் ஒரு ரகம். ஓடினால் இன்னும் கொஞ்சம் அதிகம் சாப்பிடலாமே என ஓடுவோர் மற்றொரு ரகம்.. நாங்க ரெண்டாவது ரகம்....
முதல் நாள் மாலை (Starters)
ரயில் நிலையத்தில் ஒரு சர்க்கரை இல்லா காப்பியுடன் எங்கள் பயணத்தை இனிதே தொடங்கினோம் (அதென்ன சக்கர இல்லாம.. அதானே? பழகிடுச்சி பா). மணி ஆறானது , வண்டி கிளம்பியது. நான், சதிஷ், ராமச்சந்திரன், ரதேஷ் மற்றும் வினோத் ஒன்றாக ரயிலில் பயணம் செய்தோம்.
கொறிக்க கொஞ்சம் லேய்ஸ் சிப்ஸ் மூணு பாக்கெட் வாங்கி இருந்தோம். கொஞ்ச நேரத்துல சமோசா வித்துக்கிட்டு ஒருத்தர் வந்தார். ஆனியன் சமோசாவா என வினவினார் ராம் , இல்லை சார், ஆலூ என்று பதில் வர அவரை அனுப்பிவைத்தோம். லைட்டா பசிக்கவே என் அகமுடையாள் கொடுத்து விட்டிருந்த சப்பாத்தி கத்திரிக்காய் கறி எடுத்து அனைவரும் பகிர்ந்துண்டோம். உண்டு முடித்த ஐந்து நிமிடங்களில் வெங்காய சமோசா விற்பவர் வந்தார். ஐந்து பேருக்கு நான்கு பொட்டலங்கள் மற்றும் கூட கடித்துக்கொள்ள நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வாங்கி உண்டோம். அந்த சுவையை சதிஷிற்கும் அறிமுகப்படுத்தினோம். பிரியாணி, சப்பாத்தி, night dinner என கூவி விற்பவரை கண்டுகொள்ளாமல் காத்திருந்தோம். ஆந்திரா மாநிலம் கூடூர் (Gudur) நிலையத்தில் வண்டி நிற்க சிற்றுண்டி கடையை தேடிப்பிடித்தோம். நான்கு plate இட்லி வடை (3+1) மற்றும் ரெண்டு plate தோசை வாங்கிக்கொண்டு வண்டி ஏறினோம். முதலில் ராம் அனைவருக்கும் இட்லி வடை வாங்க இருந்தார் , நான் எனக்காக தோசை வாங்கினேன் வினோத்தும் தோசை கேட்டார் , ஒரு plate இட்லி வடை அதிகம் ஆனது. முயற்சித்தோம் ஆனால் ஒரு இட்லி மிகுந்து போனது. சற்றே வருத்தத்துடன் அதை கடாசி விட்டு அன்றைய சாப்பாட்டு கதையை முடித்துக்கொண்டோம்.
இரண்டாம் நாள் (Main Course)
காலை ஒரு காப்பியுடன் விடிந்தது - சிலருக்கு பல்துலக்கிய பின்; சிலருக்கு குழம்பி பற்பசையாக செயல்பட்டது. Secunderabad நிலையத்தில் இறங்கி Oyo Room (Lakdikapul) சென்று குளித்து முடிக்க மணி பத்தானது. அனைவருக்கும் கொலைப்பசி. பக்கத்தில் ஒரு ரோட்டோர தோசை கடையைக்கண்டு அங்கு சென்றோம். ஆளுக்கொன்றென ஐந்து பெசரட்டு உப்மா ஆர்டர் செய்தோம். தாமதம் ஆகும் என அறிந்து அது வரும் வரை மூன்று plate வடை சொன்னோம் - ஒரு plate க்கு இரண்டு அதில் ஒன்று சாம்பாரில் மிதந்து. அதை கொறித்து முடிக்கும் முன்னரே கடை நடத்துபவர்கள் கன்னடர்கள் என கண்டறிந்து அவர்களுடன் ராம் மற்றும் நான் கன்னடத்தில் உரையாட அவர்களுக்கு மெத்த மகிழ்ச்சி. பெசரட்டு அருமையாக இருந்தது, சூடான தோசை சாப்பிடுவது நமக்கு பழக்கம் தான். அதே போல் பெசரட்டும் என எண்ணி அதை பிட்டால் உள்ளே உப்மா மாவு consistencyஇல் இருக்க கைக்கு ஒட்டிக்கொண்டு சுட்டது. இதற்க்கு ஒரு தனித்திறமை வேண்டும் போலும் இன்னும் இரண்டு சொன்னோம். மேலும் ரெண்டு மசாலா தோசை என வயிறார உண்டு தேநீர் அருந்தி தாகசாந்தி செய்தோம்.
Expo சென்று bib எல்லாம் வாங்கிய பின் இன்னும் குமார் (SKU) மற்றும் பிரகாஷ் வந்த பாடில்லை. பசிக்க ஆரம்பித்து விட்டது. மணி ரெண்டானது. யானை பசிக்கு சோளப்பொரி போல எங்கள் பசியாற்ற Energy Bars ஒரு நான்கு வாங்கி அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் கடித்துக்கொண்டோம். அவர்கள் இருவரும் வந்து அனைவரும் கிளம்பி நாங்கள் மதிய உணவுக்கு Kirthunga Restaurant சேர மணி 3:30 ஆனது. Kukatpally Kirthunga தான் செல்ல வேண்டும் என ராம் அடம் பிடித்ததால் அங்கேயே சென்றோம். இப்போது நாங்கள் எட்டு பேர் வேதா உட்பட. அதில் மூவர் சைவம், மற்றும் ஒருவர் சனிக்கிழமை சைவம் - மொத்தம் நான்கு சைவம், நான்கு அசைவம். அங்கு கேழ்விரகு களி நன்றாக இருக்கும் என ராம் மற்றும் வேதா பரிந்துரைக்க அனைவருக்கும் களி சொன்னோம். தொட்டுக்கொள்ள Gutti Vankaya (எண்ணெய் கத்திரிக்காய்) சைவர்கள் எடுக்க மற்றோர் நாட்டு கோடி புலுசுடன் (நாட்டுக்கோழி குழம்பு) உண்டனர். பின்னர் மட்டன், கீமா, மற்றும் வெஜிடபிள் என மூன்று வகை பிரியாணிகள் கொணர்ந்து அவரவர் ருசிக்கேற்ற படி உண்டோம். தொட்டுக்கொள்ள Head fry (தலைக்கறி) மற்றும் Brain Fry (மூலைக்கறி) கொண்டனர் அசைவப்பிரியர்கள். ராயலசீமா ஸ்டைல் குக்கிங் என்றாலே சற்று காரம் தூக்கல் தான். விளைவு அனைவர் கையிலும் Tissue அல்லது kerchief, ஒழுகும் மூக்கை துடைத்துக்கொள்ள!! முடித்து வெளியில் வந்து மெட்ரோ ரயிலில் ரூம் சேர மணி கிட்டத்தட்ட ஐந்தானது.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டென்பர்; ரன்னர்க்கு இருக்காதா? சற்று நேரம் கண்ணசந்து பின்னர் ஒரு கூட்டம் சார்மினார் நோக்கி சென்றது. நான் குமார் மற்றும் ரதேஷ் செல்லவில்லை. நாங்கள் 7:30 மணிக்கு பக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா ஹோட்டல் சென்று பட்டர் மசாலா, ஆனியன் ரவா, பிளைன் மசாலா என ஆளுக்கொரு தோசை உண்டு தேநீர் அருந்தினோம். சார்மினார் சென்ற கூட்டம் Mango Falooda (எனது பரிந்துரையின் பேரில்) மற்றும் Malai Mango உண்டு அங்கு famousஆன Biscuits பத்து வகை வாங்கி ருசித்தனர். ரூம் திரும்பினர். அப்போது குமரவடிவேல் வர நேரம் சரியாக இருந்தது. அவரும் அவர்களுடன் சென்று அவர்கள் ஊத்தப்பம், இரானி டீ, fruit salad என விருப்பத்திற்கேற்ப உண்டு ரூம் வந்து 10 மணிக்கு அனைவரும் நாளை மாரத்தான் எண்ணிக்கொண்டு படுக்க சென்றோம். இப்படியாக எங்கள் இரண்டாம் நாள் Food Marathon முடிந்தது.
மூன்றாம் நாள் (Dessert)
காலை மாரத்தான் ஓட்டம் என்பதால் சிற்றுண்டி அவர்கள் கொடுத்தது தான் அதுவும் நான் உண்ணும் போது மணி 11, ஏனெனில் நான் முடிக்கும் போதே மணி 10:15. நன்கு உண்டதன் பயனோ என்னவோ - Full Marathon (42.2 km) ஓடிய மூவரும் 6 மணி நேரத்துக்குள் முடித்தோம். Half Marathom (21.1 km) ஓடிய மூவரும் 2 மணி நேரத்துக்குள் முடித்தனர். இன்னொருவர் ஓடும் எண்ணத்தில் வரவில்லை.
நாங்கள் மூவரும் Full Marathon முடித்து வருவதற்குள், 21 Km ஓடியவர்கள் எல்லாம் ரூம் சென்று விட்டனர். வினோத் எங்களுடன் இருந்தார். நாங்கள் நால்வர் ரூம்க்கு திரும்பி செல்லும் நேரத்திற்கு மக்கள் Eagle BAR-ல் அமர்ந்திருந்தனர். எங்களது “வெற்றியை” அங்கே கொண்டாடினோம் - சற்று Hydration உடன். தொட்டுக்கொள்ள Chilli Panner, Pepper Chicken, Chilli Fish, Fish Finger, Peanut masala, Gobi Manchurian என ஏகப்பட்ட items. காலதாமதம் ஆகி வந்ததால் 1:45 க்கு முடித்துக்கொண்டு உணவு உண்ண ராயலசீமா ருச்சுலு (Rayalaseema Ruchulu) சென்றோம். இன்றும் வேதா எங்களுடன் இருந்தார் மொத்தம் 9 பேர். சைவம் உண்பவர்கள் ரோட்டி மற்றும் வெஜ் கறி ஆர்டர் செய்தோம். அசைவர்கள் மீண்டும் களி நாட்டுக்கோடி புலுசு முதலில் கொண்டு பின்னர் ரொய்யலு (Prawn) Fry மற்றும் பிரியாணி உண்டனர். மேலும் ஒன்றிரண்டு இட்டம்ஸ் உண்டனர் ஆனால் திரு. Carlsberg எனது மூளையை மழுங்க செய்ததால் நினைவில்லை. அதன் பின் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்தது. எங்களது இரண்டு நாள் சோற்று பயணம் இனிதே முடிந்தது - இடையில் ஒரு சிறிய ஓட்டமும் நடந்தேறியது. வயிற்றை காயப்போட்டு உடலை வருத்தி சாதிக்க நினைப்போர் நிறைய பேர். நாங்கள் வயிற்றுப்பசியை நன்கு கவனித்து உடலை பேணிப்பாதுகாத்து பலமாக ஓடுவதை குறிக்கோளாக கொண்டவர்கள். ஆதலால் எங்களால் உணவையும் ரசிக்க முடிகிறது, ஓட்டத்தையும்.
Good incentive for marathon.!!!!
ReplyDeleteha.. ha..
ReplyDeleteஉங்களோடு சேர்ந்து மூன்று நாள் மூன்று வேளையும் உண்ட திருப்தி எனக்கும்.. எனக்கு Karcheif தேவைபடாது. நமக்கு காரம் கண்டிப்பா வேணும்...😄
நீங்கள் ஹைதராபாத் மாரத்தான் ஓட்டம் ஓடுவதற்கு ஊக்கம் தந்திருந்தால் கூட இவ்வளவு அருமையாக இருந்திருக்காது ஐயா... இதுபோல் அல்லவா ஓட வேண்டும்...
ReplyDelete